"கள்ளக்கடல் எச்சரிக்கை.." குமரி உட்பட 4 மாவட்டங்கள் கடல் பக்கமே செல்ல வேண்டாம்! வானிலை மையம் பரபர
சென்னை: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக் கடல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலைகள் அதிக உயரத்தில் எழும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வானிலை மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான கோடைக் காலம் நிலவி வந்தது. அப்போது வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட வர முடியாத சூழலே நிலவியது.

ஆனால், ஜூன் முதல் வாரத்திற்குப் பிறகு வானிலை மாறிய நிலையில், வெப்பம் குறைந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வெப்பம் இல்லை.. அதேபோல பெரியளவில் மழையும் இல்லை. ஆங்காங்கே சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது.
கள்ள கடல் எச்சரிக்கை: இதற்கிடையே இப்போது தமிழகத்தில் உள்ள 4 தென் மாவட்டங்களுக்குக் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக் கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் கடலில் அதிக உயரத்திற்கு அலைகள் எழும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஆனால், இந்த கள்ளக் கடல் எச்சரிக்கை என்பது பலருக்கும் புதிதாகவே இருக்கும். அதென்ன கள்ளக் கடல் எச்சரிக்கை.. இதுபோன்ற நேரங்களில் என்ன தான் நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன அர்த்தம்: பொதுவாகக் காற்று அல்லது புயல் ஏற்படும் போது மட்டுமே கடல் கொந்தளிப்புடன் இருக்கும். மற்ற நேரங்களில் கடல் அமைதியாகவே இருக்கும். ஆனால், இதுபோல காற்று, புயல், சுழல் என எதுவுமே இல்லாமல் திடீரென கடல் கொந்தளிப்பது தான் கள்ளக் கடல் பாதிப்பு என்று கூறப்படுகிறது.. அதீத காற்றின் காரணமாக மட்டும் திடீரென கடல் சீற்றம் ஏற்படுவதே கள்ளக் கடல் எனக் கூறப்படுகிறது.
கள்ள என்றால் திருட்டு என்று அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும்.. எந்தவொரு வானிலை மாற்றங்களும் இல்லாத போது திடீரென திருடன் போல் கடல் சீற்றம் ஏற்படுவதாலேயே இதைக் கள்ளக் கடல் என்கிறார்கள்.. இந்த கள்ளக் கடல் எச்சரிக்கை தான் இப்போது நான்கு கடலோர மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை கடலோர பகுதிகளில் அலைகள் அதிக உயரத்தில் எழும்.. இது மட்டுமின்றி இந்த காலகட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்
இதனால் கடலோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுபோல ஏற்படாமல் இருக்கப் படகுகளை இடைவெளிவிட்டு நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அவசியமில்லை என்றால் கடற்கரைகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications