வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னைக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. வானிலை அலர்ட்
சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இதனால் இன்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை கனமழை பெய்யும் இடங்கள்
நாளை செவ்வாய்க்கிழமை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22 ஆம் தேதி வரை கனமழை தான்
19-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 20-11-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடதூர், மயிலாடுதுறை, விழுப்புரம். செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
21-11-2025 மற்றும் 22-11-2025: திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் கிளைமேட் எப்படி
சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு
நேற்று மதியம் 1 மணி வரையிலான நேரப்படி, குமரி மாவட்டம் திற்பரப்பில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழையும், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் 4 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. மேலும் சிதம்பரம், வேதாரண்யம், தரங்கம்பாடி, கோடியக்கரை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications