அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்தம்.. மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
சென்னை: தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மீனவர்கள் யாரும் ஜனவரி 5 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரபிக் கடலின் தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுப்பெற்று அதே இடத்தில் நிலவும்.

இதனால் லட்சத்தீவு, அரபிக் கடலின் தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு பகுதி, மத்திய கிழக்கு பகுதி ஆகியவற்றில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே இந்த பகுதிகளுக்கு நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பல இடங்களில் காலை நேர பனி மூட்டம் இருக்கும். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் 1 செ.மீ. மழை பெய்துள்ளது. வேறு இடங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவியது. இவ்வாறு சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications