சென்னையில் இன்று மழை இருக்கா? வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழக வானிலை இதுதான்
சென்னை: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில் இது சென்னை உள்பட தமிழக வானிலையில் எந்த மாதிரியான தாக்கத்தை இன்று ஏற்படுத்தும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை என்பது படிப்படியாக குறைந்து வருகிறது. சில இடங்களில் மட்டுமே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே தான் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டி நிலவி வருகிறது.
இது படிப்படியாக வடக்கு - வடகிழக்கு திசையில் நகர உள்ளது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இல்லாமல் இருந்தாலும் கூட சில இடங்களில் மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக நாளை (டிசம்பர் 22) முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை எடுத்து கொண்டால் அடுத்த 24 மணிநேரத்தில் வனம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரு சில பகுதிகளின் லேசான பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை என்பது 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 24 - 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழக கடலோர பகுதியில் இன்று முதல் வரும் 24ம் தேதி மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. அதேவேளையில் வங்கக்கடல் பகுதியை பொறுத்தவரை இன்று மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவாளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆந்திர - தெற்கு ஒடிசா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் அதனையொட்டி தென்மேற்கு - மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications