அப்பாவுடன் பேச முடியல! கிட்ட கூட நெருங்க முடியலை.. உதயநிதியுடன் மீட்பு பணியில் மாரி செல்வராஜ் வேதனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தனது சொந்த கிராமமான புளியங்குளத்திற்கு செல்ல முடியவில்லை என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. பலர் பகுதிகளில் ஆறுகளில் இருந்து பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டது.

அது போல் பாபநாசம் அணை, மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து வந்த தண்ணீரும், பல இடங்களில் குளங்கள், கன்மாய்கள் உடைந்ததால் அங்கிருந்து வந்த தண்ணீரும் ஊர்களுக்குள் புகுந்து ஆங்காங்கே இடுப்புக்கு மேல் தண்ணீரை தேங்க வைத்தது.
நெல்லை தாமிரபரணி ஆற்றின் ஆக்ரோஷம் காரணமாக பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் சென்றாலும் ஆற்றின் வேகம் காரணமாக படகு மூலம் மீட்பதிலும் தொய்வு ஏற்பட்டது.
எங்கு பார்த்தாலும் தண்ணீர், நெல்லை பேருந்து நிலையத்திலும் தண்ணீர். தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி கனரக வாகனங்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய பயிர்கள், கடைகள் உள்ளிட்டவை நீரில் மூழ்கி விவசாயிகளுக்கும் வியாபாரிகளுக்கும் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் அங்கிருந்த பாத்திரங்களையும் பொருட்களை வாரி சுருட்டிக் கொண்டு சென்றது. தண்ணீரின் வேகத்தை பார்த்ததும் பொதுமக்கள் துணியை கூட எடுத்துக் கொள்ளாமல் உயிர் பிழைத்தால் போதும் என வெளியேறி விட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள். குழந்தைகளுக்கு பால் வாங்க முடியவில்லை. உணவு சாப்பிட்டு 2 நாட்கள் ஆவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் மீட்பு பணியில் இயக்குநர் மாரி செல்வராஜ் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது.
ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர், பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர், குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
அது போல் மற்றொரு பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டுள்ளனர் . முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கபட்டுள்ளனர் .வெள்ளத்தின் வேகம் குறையாமல் இருப்பதால் அடுத்த கிராமங்களுக்குள் நுழைவது கடினமாக இருக்கிறது... நன்றாக விடியும்வரை மக்கள் தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவும்... மீள்வோம் என தெரிவித்துள்ளார்.
தனது சொந்த மாவட்டமான நெல்லையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மாரி செல்வராஜ் கூறுகையில் எனது சொந்த ஊரான புளியங்குளத்திற்கு செல்ல முடியவில்லை. அங்கு ஆக்ரோஷமான தண்ணீர் தேங்கியுள்ளது. அங்குள்ள மக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த கிராமத்தில் எனது பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
தற்போது அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன. எனினும் அந்த கிராமத்தில் உள்ள பலரை தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. கிராமத்தை சுற்றி வாழைத் தோப்பு, வயல்வெளிகள் இருக்கும். இங்கு வாழை தோப்பெல்லாம் மூழ்கிவிட்டது.

இதனால் வாழை தோப்பு எது சாலை எது என தெரியாத அளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது. பல இடங்களில் தாமிரபரணி ஆற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த இடத்தை அணுகக் கூட அச்சம் ஏற்பட்டுள்ளது. என் அப்பாவுடன்பேசக் கூட முடியவில்லை. இவ்வாறு மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து உதயநிதி போட்ட ட்வீட்டில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் நமது கழக அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் உள்ள புனித லூசியா நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில், தூதுகுழி, முத்தாலங்குறிச்சி கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைத்து வழங்கிட அதிகாரிகள் - அலுவலர்களை வலியுறுத்தினோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications