அடுத்த 2 நாட்கள் மிக கவனம் தேவை.. வழக்கத்தைவிட அதிகமாக வெயில் இருக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கோடை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
கடந்த ஜனவரி 15ம் தேதியுடன் தமிழ்நாட்டில் பருவமழை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.

பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 16-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் நிலவும்போது, உடலில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க, தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். அப்போதுதான் உடலில் நீர் குறையாமல் இருக்கும். வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, பழைய சோறுக் கஞ்சி , எலுமிச்சை ஜூஸ் போன்ற பானங்களை அருந்தினால் நீர் குறைவுப் பிரச்னை இருக்காது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
