அம்மாடியோவ்.. சென்னையில் இந்த வருடம் 2000 மி.மீ மழை பெய்துள்ளது.. வெதர்மேன் அள்ளி தெளித்த டேட்டா
சென்னை: நிஷா, நிவர் புயல்களை விடவும் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதிக மழை கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டை எத்தனையோ புயல்கள் தாக்கினாலும் பெருமழையை கொடுப்பதால் புயலை பார்த்து யாருக்கும் அச்சம் ஏற்படுவதில்லை. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்குப் பிறகுதான் புயல் மழை என்றாலே ஒருவித அச்சம் மக்களிடையே ஏற்படுகிறது.

கடந்த 50 ஆண்டு காலமாக சென்னை மற்றும் மகாபலிபுரம் பகுதிகளைச் சேர்த்து மொத்தம் 22 புயல்கள் தாக்கியுள்ளன. 1972 ஆம் ஆண்டு சென்னையை புயல் தாக்கிய போது 100 மிமீ முதல் 150 மிமீ வரை மழை பதிவானது. 1984ஆம் ஆண்டு மற்றொரு புயல் சென்னையைத் தாக்கியது. இந்தப் புயல் ஸ்ரீஹரிகோட்டா வழியாக கரையைக் கடந்தது. 1985ஆம் ஆண்டு சென்னையைத் தாக்கிய புயலானது நெல்லூர் வழியாக கரையைக் கடந்தது. அப்போது காற்றின் வேகமானது மணிக்கு 80 கிமீ முதல் 90 கிமீ வரை வீசியது.
கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னையை தாக்கிய அதி தீவிர புயலால் 2 நாட்களில் 350 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 120 கிமீ முதல் 140 கிமீ வரை வீசியது. அக்டோபர் 29ஆம் தேதி உருவான புயல் 31ஆம் தேதி சென்னையின் கரையை கோரமாக சீண்டியது. தமிழகத்தில் 69 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அப்போது 26 சென்டி மீட்டர் மழை பதிவானது. கடந்த நுற்றாண்டில் சென்னை போன்ற ஒரு மாநகரத்தில் புயலின் கண் எனப்படும் மத்திய சுழல் பகுதி நேரடியாக சென்னையைக் கடந்தது.
சென்னையை நீலம் புயல் தாக்கிய போது 120 மிமீ மழை பதிவானது. காற்றின் வேகமானது 70 கிமீ வேகத்தில் வீசியது. சென்னை துறைமுகத்தில் 7ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. நீலத்தின் வேகத்தால் தரை தட்டி நின்ற பிரதீபா காவிரி கப்பலின், 5 மாலுமிகளையும் சேர்த்து மொத்தம் சென்னையில் 19 பேர் பலியாகினர்.
வர்தா புயல் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையை தாக்கியது. சென்னையில் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வர்தா புயலின் கண் பகுதியும் சென்னையைக் கடந்தது. 192 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் சென்னையில் நீண்ட காலமாக இருந்த பல மரங்கள் சரிந்து விழுந்தன. வரலாறு காணாத பெரும்புயலும், மிக மோசமான புயலும் வர்தா தான். சென்னை நகரமே பல நாட்கள் ஸ்தம்பித்தது. பெரிய அளவில் மழையை கொடுக்கவில்லை வர்தா புயல்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்கி புயலானது தாக்கிய போது சென்னையில் 2 நாட்களில் 300 மிமீ மழையிலிருந்து 500 மிமீ மழையானது பதிவானதாகச் சொல்லப்படுகிறது. அதிதீவிரமாக சென்னையைக்கடந்த இந்தப் புயலின்போது மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசியது.
இந்த ஆண்டு மிக்ஜாம் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் மட்டும் இந்த ஆண்டு 2000 மிமீ மழை பெய்துள்ளதாக வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 48 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 469 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஆவடியில் மிக மோசமாக 564 மிமீ மழையும் பூந்தமல்லியில் 483 மிமீ மழையும் பெய்துள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் தடைபட்டது. செல்போன் சிக்னல்கள் கிடைக்கவில்லை. விடாமல் கொட்டித்தீர்த்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் வடசென்னை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ஓக்னி, நிஷா, நிவர் புயல்களை விடவும் மிக்ஜாம் புயல் அதிக மழையை கொடுத்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Altast signal came and can share what i posted in FB in few minutes i got signal yesterday.
— Tamil Nadu Weatherman (@praddy06) December 6, 2023
Michaung one of the best Cyclone giving rainfall for KTCC, even better than Ogni (2006), Nisha (2008) and Nivar (2000).
Note: Nisha was historic for Delta belts. pic.twitter.com/KhtsZPvqZd
தற்போதுதான் சிக்னல் வந்தது, நான் நேற்று சிக்னல் கிடைத்த சில நிமிடங்களில் பேஸ்புக்கில் பதிவிட்டதை பகிர்ந்து கொள்ளலாம். ஓக்னி (2006), நிஷா (2008) மற்றும் நிவார் (2000) ஆகியவற்றை விடவும், KTCC க்கு மழைப்பொழிவைக் கொடுக்கும் சிறந்த சூறாவளிகளில் ஒன்று மிக்ஜாம் என்று பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். டெல்டா பெல்ட்களுக்கு நிஷா வரலாற்று சிறப்புமிக்க புயல் என்றும் பதிவிட்டுள்ளார் பிரதீப் ஜான்.
பிரதீப் ஜான் சொல்வதைப் போல இது பெருமழைதான். 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது கூட நகரின் பல பகுதிகளில் இயல்பு நிலைதான் இருந்தது. திங்கட்கிழமையன்று விடாமல் கொட்டிய பெருமழையால் சென்னையின் பல பகுதிகளில் நடமாட முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்தது. புறநகர் பகுதிகள் முற்றிலும் மிதக்கின்றன. இந்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் பல நாட்கள் ஆகக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications