நானே வந்து தரேன்.. ட்விட்டரில் குழந்தைக்காக உதவி கேட்ட பெண்.. நேரில் போய் உதவிய அமைச்சர் TRB ராஜா!
சென்னை: 5 மாத குழந்தைக்கு கொடுக்க பால் பவுடர் இல்லை, யாராவது உதவ முடியுமா என சமூக வலைதளத்தில் கேட்ட பெண்ணிடம், இடத்தைக் கேட்டு, தானே பால் பாக்கெட்டை வாங்கிச் சென்று வழங்கியுள்ளார் அமைச்சர் டிஆர்பி ராஜா.
மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.

மிதக்கும் சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று தொடரக்கூடும் என வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் மழை தொடரும், டிசம்பர் 5 (நாளை) மிக்ஜாம் புயல் தீவிர புயலாக மாறி தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்கும். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்திலும் மற்றும் மணிக்கு 110 கி.மீ வேகத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களும் மழை நீரினால் சூழப்பட்டுள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மீட்புக் குழுவினர் தீவிரம்: சென்னையில் மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. குரோம்பேட்டை, பெரம்பூர், தாம்பரம் போன்ற பகுதிகளில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், மின் விநியோகம் மற்றும் இணையதளம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழையால் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை பேரிடர் மீட்புக்குழுவினர் (என்.டி.ஆர்.எஃப்) மீட்டு வருகிறார்கள். சென்னை மாநகர போலீசார், மீட்புக்குழுவினர் அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் கோரிக்கை: சென்னையைச் சுற்றியுள்ள நீர்தேக்கங்களில் 98% நிரம்பிவிட்டதால் நீர்மட்டம் தொடர்ச்சியாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையைச் சுற்றியுள்ள செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி உள்ளிட்ட 6 நீர்தேக்கங்களின் 98 சதவீதம் நீர் நிரம்பிவிட்டதால் நீர் திறப்பு தொடர்பாக மக்களுக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மழைநீர் தேங்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எக்ஸ் சமூக வலைதளத்தில், உதவி கோரி வரும் கோரிக்கைகளை விசாரித்து, அவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

உடனடியாக உதவும் அமைச்சர் டிஆர்பி ராஜா: அந்தவகையில், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், தி.நகர் பகுதியில் வசிக்கும் தனக்குத் தெரிந்தவர்களின் 5 மாத குழந்தைக்கு கொடுக்க பால் பவுடர் இல்லாத நிலையில், சுற்றிலும் நீர் சூழ்ந்துள்ளதால், வாங்க முடியாத நிலையில் தவிப்பதாகவும், யாரேனும் உதவ முடியுமா என்று கேட்டும் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அமைச்சர் டிஆர்பி ராஜா, அவரிடம், லொக்கேஷன் கேட்டு, வேறு ஏதேனும் பொருட்கள் வேண்டுமா எனக் கேட்டார். இதையடுத்து, பால் வாங்கிக் கொண்டு, 10 நிமிடங்களில் எழிலகம் செல்லும் வழியில் தானே கொடுத்து விடுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதன்பிறகு, அந்தப் பெண், அமைச்சர் சொன்னபடி, குழந்தைக்கு பால் சென்று சேர்ந்துவிட்டதாகக் கூறி, அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக, உதவி கோரி பதிவிடும் நபர்களிடம் விசாரித்து, அவர்களுக்கு உதவும் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார் அமைச்சர் ராஜா. அமைச்சர் டிஆர் பி ராஜாவின் இந்தப் பணிகளை பலரும் சமூக வலைதளத்தில் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications