School leave: பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை! வங்கக் கடலில் விழித்திருக்கும் ’கண்’.. மிரட்டுமா ’மொந்தா’ புயல்?
புதுச்சேரி: தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் இது புயலாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரியில் மொந்தா புயல் எச்சரிக்கை காரணமாக ஏனாமில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 27ஆம் தேதியான நாளை முதல் அக்டோபர் 29 வரை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நேற்று (25.10.2025) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, இன்று (26.10.2025) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக மாறியுள்ளது.
இதன் மையம் தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 780 கிலோ மீட்டர் தொலைவில், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மொந்தா புயல்
இந்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, மேலும் 48 மணி நேரங்களில் தீவிர புயலாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான பெயர் "மொந்தா" (Montha) என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், வரும் அக்டோபர் 28ஆம் தேதி மாலை அல்லது இரவு நேரத்தில், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவைச் சுற்றிய மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கடற்கரையை கடக்கக்கூடும் என கூறப்படுகிறது.
வானிலை முன்னறிப்பு
அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வரை, இடையிடையே 110 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயல் கடற்கரை பகுதிகளைக் கடக்கும் நேரத்தில், கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், சென்னை கடற்கரையிலும் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் அடுத்த சில நாட்களில் கடலில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
புயல் தாக்கம் காரணமாக புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, ஏனாம் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 27 முதல் 29 வரை மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொந்தா புயல் எச்சரிக்கை காரணமாகவே பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை
மேலும் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மொந்தா புயல் அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெறும் வாய்ப்பு அதிகம் என்பதால், மீனவர்கள், கடற்கரை மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. புதுச்சேரி மாநில அரசு மீட்பு மற்றும் அவசர நடவடிக்கைகளுக்காக தங்களது குழுக்களை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications