இரவு தான் மழை தீவிரம் அடையும்.. புயல் எவ்வளவு தொலைவில் உள்ளது? தமிழ்நாடு வெதர்மேனின் லேட்டஸ்ட் தகவல்
சென்னை: சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. எனினும் இரவு நேரத்தில் தான் மழை கொஞ்சம் தீவிரம் அடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மசூலிபட்டினத்திற்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 670 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைய தினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மண்டல தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்
5-ஆம் தேதி: மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கட்கிழமை 4-ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதியன்று முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு நேரத்தில்: தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு மழை கொஞ்சம் தீவிரம் அடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இரவு நேரத்தில் மழை கொஞ்சம் தீவிரம் அடையும். மேகங்கள் உள்ளே நன்கு திரண்டு வருகின்றன. ஆனால், வேகமாக நகர்ந்து வருகின்ற்ன. புயல் இன்னும் வெகு தொலைவில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பொதுவாக புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசக்கூடும். இதேபோல் அதி கனமழை பெய்யும். ஆனால் ஒரு சில புயல்கள் மழையை குறைத்து விட்டு காற்றை மட்டும் கொடுக்கும்.
வர்தா புயல்: முன்பு கரையை கடந்த மாண்டஸ் புயலின் போது பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் "வர்தா" புயல் கரையை கடந்த போது சென்னையை சூறையாடி விட்டு சென்றது அந்த அளவிற்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. ஆந்திர மாநிலத்தில் மிக்ஜாம் புயலானது கரையைக் கடந்தாலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 4-ஆம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னேற்பாடு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications