தமிழ்நாட்டில் மழையெல்லாம் முடிஞ்சது.. இனி உறைபனிதான்! எச்சரித்த வானிலை ஆய்வு மையம்
சென்னை: வடகிழக்கு பருவமழை ஏறத்தாழ நிறைவடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று உதகையில் உறைபனிக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை என்றாலும், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதிய அளவு மழையை கொடுத்தது. மேட்டூர் தவிர ஏறத்தாழ அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன. இந்நிலையில் ஜனவரி 15ம் தேதியுடன் பருவமழை முடிவுக்கு வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம் முழுவதும் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்று உதகையில் உறை பனி நிலவ வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
19.01.2024 அன்று தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20.01.2024 முதல் 23.01.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications