ஊட்டியில் 4 நாளாக ரெஸ்டே எடுக்காமல் அடித்து தள்ளிய கனமழை! சுற்றுலா தலங்கள் திறப்பு! மக்கள் மகிழ்ச்சி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் குறைந்ததால் சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று மழையின் தாக்கம் குறைந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தில் மழை கொட்டோ கொட்டென கொட்டியது. இதனால் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. நீலகிரி மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.
இடைவிடாமல் மழை
இடைவிடாமல் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் சரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அது போல் தீயணைப்புத் துறையினர், போலீஸார் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மின்கம்பங்கள்
மரங்களின் மீது மின்கம்பங்கள் விழுந்துள்ளன. பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பகுதியிலும் மரங்கள் விழுந்தது. ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன் வேலி அணையிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. மின் விநியோகம் சீர் செய்யப்பட்டால்தான் ஊட்டிக்கு குடிநீர் கிடைக்கும். அந்த வகையில் 5 நாட்களாக தண்ணீர் வரவில்லை.
கல்லட்டி- மசினகுடி சாலை
கல்லட்டி- மசினகுடி சாலையில் ராட்சத பாதை உருண்டு விழுந்ததால் தார் சாலை பழுதடைந்தது. இதனால் போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. நேற்று நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையை சீரமைத்து வாகன போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ரெட் அலர்ட்
ரெட் அலர்ட் எச்சரிக்கையால் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. சுற்றுலா பயணிகளும் 4 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மேலும் புது இடம் என்பதால் எங்கு ஆபத்து இருக்கும் என்பது சுற்றுலா பயணிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் அவர்களுக்கு உள்ளூர் மக்கள் அறிவுரை வழங்கவும் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.
வேகம்
இந்த நிலையில் நேற்று முதல் காற்றின் வேகமும் மழையின் தாக்கமும் குறைந்ததால் மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன. இதனால் ஊட்டியில் கோடையை கழிக்க வந்து விடுதிகளிலேயே முடங்கிய பயணிகள் வெளியே வந்து ஊட்டி பூங்காவை பார்வையிட்டனர்.
வனத்துறை கட்டுப்பாடு
எனினும் வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைன் பாரஸ்ட், சூட்டிங் முனை உள்ளிட்ட தலங்கள் பாதுகாப்பு கருதி இன்று திறக்கப்படவில்லை. தமிழ்நாடு சுற்றுல கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொட்டபெட்டா, ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உள்ளிட்டவையும் திறக்கப்படவில்லை.
புதிய கார் சிக்கியது
கூடலூர் பகுதியில் தர்மகிரி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய புதிய கார் மீட்கப்பட்டது. கடந்த 4 நாளாக இடைவிடாது மழை கொட்டியதால் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. கேரட் சாகுபடியிலும் பாதிப்பு ஏற்பட்டது. மழையால் அணைகள் நிரம்பியுள்ளன. மாயாறு, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி எம்பி ராசா
நேற்றைய தினம் நீலகிரி எம்பி ஆ.ராசா. அரசு கொறடா ராமசந்திரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா உள்ளிட்டோர் புத்தூர் வயல் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 256 மி.மீ. மழையும் அப்பர் பவானியில் 123 மி. மீ மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications