தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை கிடையாது.. வலுவிழக்கிறது.. விளக்கம் கொடுத்த பாலச்சந்திரன்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறக் கூடும் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போதைய நிலவரப்படி, புயலாக வலுப்பெற்றாலும், விரைவில் வலுவிழந்துவிடும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். எனவே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
வங்கக்கடலில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் புயல் உருவாகி வருகிறது. இது சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதிப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரிய பாதிப்பை தமிழகத்திற்கு ஏற்படுத்தாது என்று பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் கடந்த மூன்று நாட்களாக குறைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக நேற்று அது ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும், எனவேதான் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது என்றும் விளக்கமளித்தார்.
கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சுற்றி உள்ள மேகங்களை இழுத்துக்கொண்டு புயலாக மாறும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும்போது இதன் காற்றின் வேகம் 30 கி.மீ அளவில் இருக்கும். இதுவே 31-50 கி.மீ வரை காற்றின் வேகம் அதிகாரித்தால் அது லேசான புயல் என்றும், வேகம் 51-100 கி.மீ என அதிகரிக்கும் போது புயலாகவும், மேலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் அது தீவிர புயலாக கருதப்படுகிறது.
தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 30-35 வரை மட்டுமே இருக்கிறது. எனவே, தற்காலிக புயலாக இது உருவெடுத்து மீண்டும் வலுவிழந்து 30ம் தேதி காலை மகாபலிபுரத்திற்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று பாலச்சந்திரன் கூறியுள்ளார். எனவே தமிழ்நாட்டின் கடலோர மாவட்ட மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கின்றனர்.
முன்னதாக வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், "இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை ஓரிரு இடங்களில் அதி கன மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
30-11-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் ன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications