சென்னை, தென்தமிழகத்தில் சம்பவம் ஓவர்! "அடுத்த 10 நாட்களுக்கு.." வானிலை எப்படி இருக்கும்.. பரபர தகவல்
சென்னை: தென்தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை அப்பகுதிகளைக் கடுமையாகப் பாதித்ததுள்ளது. இதற்கிடையே வரும் காலங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கனமழை கொட்டியது. மிக்ஜாம் புயல் சென்னையில் கரையைக் கடக்கவில்லை என்ற போதிலும், அந்த புயல் நீண்ட நேரம் சென்னைக்கு அருகே நிலைகொண்டது.

இதனால் சென்னையில் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தது. சென்னைக்கு அடுத்து இப்போது தென்தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்ததை போலவே கேப் விடாமல் மழை கொட்டியது.
பெருவெள்ளம்: இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெள்ள நீர் மெல்ல வடிந்து வரும் நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த இரண்டு பெருவெள்ளத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை ரெயின்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த இரண்டு நாட்களாக வரலாற்றில் இல்லாத வகையில் மழை கொட்டிய நிலையில், அதில் இருந்து தென் தமிழகம் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. அடுத்து ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவமழை குறையத் தொடங்கிவிடும்" என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை ரெயின்ஸ்: அவர்கள் மேலும், "கடந்த இரண்டு நாட்களாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர நகரமான காயல்பட்டினத்தில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 946 மி.மீ., பதிவானது.
தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும்.. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி 1965 ஆகஸ்ட் 5ஆம் தேதி 709 மிமீ பதிவானதே இதற்கு முன்பு பதிவானதே சமவெளியில் பதிவான அதிகபட்ச மழை அளவாக இருந்தது.
வரும் நாட்களில் வானிலை: அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகள் மட்டுமே துல்லியமாக இருக்கும் என்பதால் பருவமழை எப்போது முடிவடையும் என்பதைத் துல்லியமாகச் சொல்வது கஷ்டம். வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி 40 நாட்களில் அது இரண்டாவது முறையாக அதிகபட்ச மழையைத் தரும். அதன் பிறகு 10 நாட்களில் மழை குறையும். எனவே, இதை வாத்து பார்க்கும் போது அடுத்த 10 நாட்களில் மழை மெல்லக் குறையும்" என்று கூறப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பில்லை: அதேபோல மற்றொரு ட்வீட்டில், "முதல் வாரத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல்,, அடுத்து இப்போது தென்தமிழகத்தில் பெருவெள்ளம் என இரண்டு கடினமான வாரங்களை நாம் எதிர்கொண்டோம். வடகிழக்கு பருவமழையின் உச்சம் முடிந்துவிட்டது. அடுத்த சில நாட்களில் எந்த பெரிய மழையும் பெய்ய வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளனர்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "19.12.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை டிச. 20 மற்றும் நாளை மறுநாள் டிச. 21 தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications