தமிழகத்தில் தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை..இன்று 18 மாவட்டங்களில் சம்பவம் உறுதி! மெட் சொன்ன அப்டேட்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது எனவும், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதே போல் கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, கும்மிடிப்பூண்டி திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஆறு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது எனவும், இன்றும் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18-11-2024 முதல் 21-11-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என சென்னை வானிலை ஆய்வி மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications