சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய மக்கள்.. அச்சத்தில் பள்ளிக்கரணை, வேளச்சேரி
சென்னை: பொதுவாக கனமழை பெய்தாலே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள ஏஜிஎஸ் காலனி உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கிவிடும்.. அந்த வகையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தற்போதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதி மக்கள், தங்கள் கார்களை பாதுகாப்பிற்காக வேளச்சேரி மேம்பாலத்தில் போய் நிறுத்தியுள்ளார்கள்.
சென்னைக்கும் மழைக்கும் எப்போதுமே ஆகாது என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது. மற்ற மாவட்டங்களில் 40 செமீ மழை பெய்தாலும் ஒன்றும் ஆவது இல்லை. ஏன் பள்ளிகளுக்கு கூட விடுமுறைவிடமாட்டார்கள்.. ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்தால் கண்டிப்பாக சிக்கல் தான் வருகிறது. ஏரி, குளங்களையும் ஆக்கிரமித்து வீடு கட்டிவிட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் வாழ்நாள் உழைப்பை கொட்டி வாங்கிய வீடுகளுக்கு அரசு மின்சாரமும், குடிநீர், வடிகால் வசதி என எல்லாமே செய்து கொடுத்து அனுமதியும் கொடுத்துவிட்டது. அரசு ஆரம்பத்திலேயே தடுத்து இருந்தால், பாதிப்புகளை வெகுவாக தடுத்திருக்கும். வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் மோசமான பாதிப்பை ஒவ்வொரு ஆண்டும் சந்திக்கும் பகுதிகள் எது என்று பார்த்தால், முதல் இடத்தில் வேளச்சேரியும், இரண்டாவது இடத்தில் பள்ளிக்கரணையும், அடுத்தாக மடிப்பாக்கமும் இருக்கும். அதனை தொடர்ந்து பெரும்பாக்கம், காரப்பாக்கம், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம் என்று அந்த ஏரியாவை முழுமையாக சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பகுதிகள் எல்லாம் ஒரு காலத்தில் பள்ளிக்கரணை ஏரியாகவும், வேளச்சேரி ஏரியாவும், மடிப்பாக்கம் ஏரியாகவும் இருந்த பகுதிகள் ஆகும்.
தற்போது பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், கோவிலம்பாக்கம்,கீழ்கட்டளை, துரைப்பாக்கம், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் சாலைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆக்ரோஷமாக இருக்கிறது. முன்னதாக நேற்று புயல் உருவாகிவிட்டது என்று சொன்ன உடனே, மக்கள் முன்னெச்சரிக்கையாக தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்த தொடங்கினார்கள். இன்று காலைக்குள் ஏராளமான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
தரையில் நிறுத்தினால் பல ஆயிரம் ரூபாயை சர்வீஸுக்காக கட்ட வேண்டியதிருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பிற்காக கார்களை நிறுத்தி உள்ளனர். வேளச்சேரி பாலத்தில் மட்டுமல்ல, பள்ளிக்கரணை பாலத்திலும் வாகனங்களை நிறுத்த தொடங்கியுள்ளார்கள். உண்மையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த மழையின் போது, பெரிய பாதிப்பினை வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் பகுதி மக்கள் சந்தித்தார்கள். இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வாரத்திற்குமேல் ஆனது. அதுபோன்ற பாதிப்பு இப்போது ஏற்படாது என்றாலும், புயல் காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வருவது ஒருபுறம் எனில், புயல் கரையை கடக்க தாமதம் ஏற்பட்டால், இந்த பகுதியையைத்தான் கடந்த ஆண்டு போலவே பாதிக்கும் என்ற அச்சம் மக்களுக்கு உள்ளது. அதனால் தான் மக்கள் கார்களை மேம்பாலங்களில் நிறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications