சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை! அத்தியாவசிய சேவைகள் இயங்கும்! வெளியானது அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக உருவெடுத்திருக்கிறது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது சென்னை, தெற்கு ஆந்திராவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மட்டுமல்லாது இது தீவிர புயலாக மாறி வரும் 5ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல 5ம் தேதியன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
மேலும், நாளை சூறை காற்று வீசும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது நாளை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என கூறியுள்ளது.
எனவே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை இந்த நான்கு மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றாலும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேநேரம், அத்தியாவசிய சேவை அளிக்கும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், பால், குடிநீர், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மின் துறை, போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications