கன்னியாகுமரி டூ திருவாரூர்.. காலை 10 மணி வரை கொட்டப் போகுது மழை.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்றும் (ஞாயிற்றுகிழமை), நாளையும் (திங்கட்கிழமை) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்று சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆகிய தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை முதலே நல்ல மழை பதிவானது. நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீட்டர் மழை பெய்தது.
நெல்லை மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று (மார்ச் 2), நாளை (மார்ச் 3) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை மார்ச் 5 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பைவிட அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications