வானில் வட்டமடித்த விமானங்கள்.. சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு குடை மஸ்ட்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது.

கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடியுடன் கூடிய மழை பெய்ததால் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்த மழை இன்று காலை விடிய விடிய பெய்தது. இதனால் சாலைளகளில் தண்ணீர் தங்கி காட்சியளிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் தினமான சனி, ஞாயிறு இரு தினங்களும் விடுமுறை தினம் என்பதால் வெள்ளிக்கிழமை மாலையே மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கினர்.
அது போல் சிலர் நேற்று மாலையும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் பூந்தமல்லி செல்லும் கோயம்பேடு பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போதாகுறைக்கு மழையும் சிறிது நேரத்திலேயே பெய்ததால் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்பட்டது.
மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை விடாமல் சில மணி நேரங்களுக்கு பெய்தது. பின்னர் விட்டுவிட்டும் பெய்தது. இந்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்ஸ டாக்கா, டெல்லி, மும்பை, பெங்களூர், கவுகாத்தி, கோவா, கோவை , நாக்பூர், சிங்கப்பூர், கன்னூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னை வந்த 12 விமானங்கள் பலத்த மழையால் தரையிறங்க முடியாமல் தவித்தன.
இதற்காக வானில் வட்டமடித்தபடியே பறந்து கொண்டிருந்தன. வானிலை ஓரளவுக்கு சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அது போல் சென்னையிலிருநது புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்த நிலையில் அடுத்த 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications