இரவு முழுக்க விட்டு விளாச போகுது மழை.. நெல்லை, தென்காசி உள்பட 13 மாவட்டங்கள் டார்கெட்.. வானிலை அலர்ட்
சென்னை: தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, செங்கல்பட்டு உள்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று இரவு முதல் குமரி, தென்காசி மாவட்டங்களில் பெய்து வரும் மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று இரவும் விடிய விடிய மழை பெய்ய உள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் மழை தீவிரம் அடைந்துள்ளது. அதற்கு முன்பு வரை வெயில் உக்கிரம் காட்டிய நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியுள்ளது.
குறிப்பாக குமரி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. லேசான மழையாகவும், இடையிடையே திடீரென கனமழையும் என விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று இரவும் மழை தொடரும் விதமாகவே வானிலை ஆய்வு மையமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1 மணி வரை
அதாவது நள்ளிரவு 1 மணி வரை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " தமிழகத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை, தென்காசி, தேனி, குமரி, நெல்லை, நீலகிரி, கோவை, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிஅ மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக வானிலை மையம் கூறுகையில், "நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
நாளை மறுநாள், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னதுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியிருந்தது.
சென்னையை பொறுத்தவரை நாளை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும், ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications