அடுத்த 1 மணி நேரம்.. நெல்லை, தென்காசி, குமரி உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாக்குமரி உள்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சென்னையில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழகத்தில் வரும் 5 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தில் வட கிழக்கு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகிறார்கள். ஆனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

அடுத்த 1 மணி நேரம்
காலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒருசில இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இடி, மின்னலுடன் மழைக்கு சான்ஸ்
முன்னதாக இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்றும் நாளையும்
நாளை மறுநாள் தொடங்கி வரும் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (29-06-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வெப்பநிலை எப்படி?
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று முதல் ஜூலை.1 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.
இன்று முதல் ஜூலை.1 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இந்த நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 23" செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications