காலையிலேயே மழை.. 10 மணி வரை ரொம்ப முக்கியம்.. ’6’ மாவட்டங்களில் வெளுக்கப் போகுது! மெட் அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை இன்று அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதற்கிடையே தமிழகத்தில் கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
தமிழக வானிலை தொடர்ந்து மாறி வருகிறது. வழக்கமாக மே மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. ஜூன் மாதத்தில் வெப்பம் தணிந்து மழை வழக்கமாக தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு வெயில் அதிகரித்து வருகிறது.
கடந்த நான்கு ஐந்து வாரங்களாகவே வெயில் மழை என மாறி மாறி இருக்கும் நிலையில், இந்த வாரம் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து வெயில் அதிகரித்தும் வருகிறது.

நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. அங்கு குளுமையான சூழல் நிலவிய நிலையில் 7 இடங்களில் வெயில் சதம் அடித்திருக்கிறது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 150 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 103 டிகிரியும், மதுரை நகர் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது. மேலும் கரூர், பரமத்தி, நாகை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 28ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 28ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.
தமிழகத்தில் கோவை தேனி திண்டுக்கல் தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்று அல்லது சில பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன்.27 வரை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், குஜராத், கொங்கன் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications