காற்றழுத்த தாழ்வு எந்த பகுதியை நோக்கி நகரும்? சென்னைக்கு மழை இருக்கா.. வானிலை மையம் அப்டேட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 5 செமீ அளவில் மழை பெய்துள்ளது. இதுபோன்று புதுக்கோட்டை, விருதுநகர், திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 27 ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
காற்றழுத்த தாழ்வு பகுதி:
நேற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்து, இன்று (22-12-2024) காலை 08. 30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24 ஆம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும்.
அடுத்த 5 நாட்கள் மழை தொடரும்:
இதனால் தமிழகத்தில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 24 ஆம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக 24 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 25 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில், 22-12-2024 முதல் 24-12-2024 வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 25-12-2024: தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகளில் 22-12-2024 மற்றும் 23-12-2024:ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-12-2024 மற்றும் 25-12-2024:: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை. அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications