சென்னையில் கொட்டி வரும் மழை.. எல்லா ஏரியாவிலும் ‘ஜில் ஜில்’ கிளைமேட்! சென்னைவாசிகள் குஷி!
சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது. காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தமிழ்நாடு முழுவதுமே பல இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில வாரங்களாக வெப்பம் பதிவானது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னை நேற்று பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் தேங்கியது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் இன்று வெயிலுடன் நாள் தொடங்கினாலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வெளியே செல்பவர்கள் ரெயின் கோட் எடுத்துச் செல்லும்படியும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், தியாகராய நகர், அண்ணாசாலை, பாரிமுனை, சென்ட்ரல், எழும்பூர், சைதாப்பேட்டை, நந்தனம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications