சிஎஸ்கே vs ஆர்சிபி.. பெங்களூர் குறித்து பதிவிட்ட கர்நாடகா ரசிகருக்கு தமிழ்நாடு வெதர்மேன் பதில்
பெங்களூர்: பெங்களூரில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வானம் தெளிவாக காணப்படுவதாக நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று மாலை ஐபிஎல் போட்டியில் மோத போகின்றன. இந்த போட்டி பெங்களூர் அணி குவாலிபையர் சுற்றுக்கு போக வாழ்வா சாவா ஆட்டமாகும். சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் எளிதாக குவாலிபையர் ரவுண்டுக்கு தகுதி பெற்று விடும்.

ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் போக முடியும்.
இதனால் பெங்களூர் ஆர்சிபி கிரிக்கெட் ரசிகர்கள் மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் களநிலவரம் வேறாக உள்ளது. கர்நாடகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இப்போது தான் பெங்களூர் உள்பட பல பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
கர்நாடகத்தில் மைசூரு, குடகு, தார்வார், விஜயாப்புரா, மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் பெங்களூரில் ஜெயநகர், பனசங்கரி, ஒயிட்பீல்டு. ராமகிருஷ்ண ஆசிரமம், பசவனகுடி, கிரிநகர், சீனிவாச நகர், கோரமங்களா, சாந்திநகர், ரிச்மண்ட் சர்க்கிள், கார்ப்பரேஷன் சர்க்கிள், கே.ஆர். மார்க்கெட், மெஜஸ்டிக், சிவாஜிநகர், விதான சவுதா, வசந்த் நகர், எம்.ஜி.ரோடு, கப்பன் பார்க், கத்ரிகுப்பே, உள்ளிட்ட பல இடங்களில் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் பெங்களூர் உள்பட தென் கர்நாடக உள்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கர்நாடகா மாநில வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, மிக கனமழை பெய்யும் என்பதை குறிக்கும் 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர், பெங்களூர் புறநகர், ராமநகர், ஹாசன், மண்டியா, மைசூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூர், சித்ரதுர்கா ஆகிய பகுதிகளில் 115 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பெங்களூரைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் நேற்று வெளியிட்ட பதிவில், பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து வீடு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. வானம் மிகவும் தெளிவாக இருக்கிறது. மழை வருவதற்கான எந்த அறிகுறியுமே இல்லை..ஆரஞ்சு, ஆப்பிள், பைனாபிள் போன்ற எச்சரிக்கைகள் எப்படி விடப்படுகின்றன என்பது குறித்து அறிய நான் ஆர்வமாக உள்ளேன். நாளை கிரவுண்டில் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
இந்த பதிவினை டேக் செய்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், "இடியுடன் கூடிய மழை எப்படி உருவாகிறது என்பது பற்றி சிலருக்குத் தெரியாது. காலை நேரங்களில் தெளிவான வானம் எப்போதும் மழைக்கு அச்சுறுத்தலாக இருக்கும். காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலையில் அதிக மழை பெய்யாது" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications