நீலகிரி, கோவையை மழை விடாது போலயே.. மீண்டும் ரெட் அலர்ட்! சென்னையிலும் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோன்று தேனி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தென் இந்தியாவில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. இந்த வருடம் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ளதால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
கேரளாவில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்றுக்குள் (வியாழக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இன்று எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
நீலகிரி, கோவை மாவட்டங்களில் நேற்று முன்தினம் வரை அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், நேற்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றும், நாளையும் அதிகனமழை வரை அங்கு பெய்யும் என்பதால் மீண்டும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று 29-05-2025 மற்றும் 30-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சென்னையில் எப்படி?
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நிலச்சரிவு அபாயம் இருப்பதால் உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவட்டம் - கூடலூர் சாலையில் நிலச்சரிவு அபாயம் இருப்பதால் கனரக வாகனங்கள் இதில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications