5 மாவட்டங்களுக்கு அலர்ட்.. நீடிக்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
மதுரை: தொடர் கனமழை காரணமாக மதுரை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில் ஏமாற்றினாலும் நவம்பர் மாதத்தில் தனது வேகத்தை ஆரம்பித்து விட்டது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. நேற்றைய தினம் காலை முதலே பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. நள்ளிரவு நேரத்தில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்வதால் அங்கு பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை நீடிப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழ்நாட்டில் இன்றைய தினம் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை,கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கனமழை நீடிப்பதால் தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications