இன்று 5 மாவட்டங்களை அடிச்சு துவைக்கப்போகும் மழை.. 2 நாளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை மையம் வார்னிங்
சென்னை: நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மே 29 (நாளை), 30 ஆகிய 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை நீடிக்கும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
அந்த வகையில், இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ஆரஞ்சு அலர்ட்), நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ரெட் அலர்ட்
இதன் தொடர்ச்சியாக நாளையும் (மே 29 - வியாழன்), நாளை மறுநாளும் (வெள்ளிக் கிழமை) தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கோவை, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும். தென்காசி, தேனி நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அவலாஞ்சி (35 செ.மீ) மேல்பவானி (30 செ.மீ) சின்னக்கல்லார் (21 செ.மீ) உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
இன்று சென்னை மற்றும் புறநகரில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் 31ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு
கடந்த 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. இதன் காரணமாக கடந்த 25 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில், ஒருசில நாட்கள் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த அக்னி வெயில் இன்றுடன் நிறைவடைய உள்ளது.












Click it and Unblock the Notifications