சுழலும் வங்கக்கடல்! சென்னை உட்பட 9 துறைமுகங்களில்.. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
சென்னை: தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் மழைப்பொழிவு பரவலாக இருக்கிறது. குறிப்பாக ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை 86% கூடுதலாக மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்திருக்கிறது. இந்த காலங்களில் ஒட்டுமொத்தமாக 90.3 மி.மீதான் மழை பொழிந்திருக்க வேண்டும்.

ஆனால், 167.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரியில் 705.5 மி.மீ, கோவையில் 502.3 மி.மீ என மழை பெய்திருக்கிறது. குறைந்தபட்சமாக தூத்துக்குடியில் 7.5 மி.மீ, நாகப்பட்டினத்தில் 47.9 மி.மீ என மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட தலா -38, -19 சதவிகிதம் குறைவாகும். அதே நேரம் இந்த மழையானது மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறம் தமிழகத்தை ஒட்டிய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது.
இது கொஞ்சம் கொஞ்சமாக ஒடிசா பக்கமாக நகர்ந்து தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அதாவது, "நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று (ஜூலை 19) காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் வட ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவுகிறது.
இது வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (20.07.2024) அதிகாலை ஒடிசா கடற்கரையை பூரிக்கு அருகில் கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேற்கு-வடமேற்கே நகர்ந்து ஒடிசா மற்றும் சத்தீஷ்கரைக் கடந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கும்" என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி என 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
புயல் காலங்களில் மீனவர்களை எச்சரிக்க இப்படி கூண்டுகள் ஏற்றுவது வழக்கம். புயல் உருவாக வாய்ப்பிருக்கிறது என்பது தொடங்கி உச்சக்கட்ட புயல் எச்சரிக்கை வரை 11 விதமாக கூண்டுகள் ஏற்றப்படுகின்றன. ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் ஏற்பட்டுள்ளதாக அர்த்தம். துறைமுகங்கள் பாதிக்கப்படாமல், பலமாக காற்று வீசும் என்றும் பொருள்.
இரண்டாம் எண் கூண்டு, புயல் உருவாகி உள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கண்டால் துறைமுகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற்றப்பட வேண்டும். மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
நான்காம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து என்றும் உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை என்றும் அர்த்தம். இப்படியாக 11 விதமாக கூண்டுகள் ஏற்றப்படும. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளக்கம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications