தமிழகத்தில் நாளை முதல் 12-ந்தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு.. ஞாயிறு அன்று பெரிய சர்ப்பைரஸ் உறுதி
சென்னை: நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 4 மற்றும் 5-ந் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் நாளை முதல் 12-ந்தேதி (சனிக்கிழமை) வரை கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் வெயில் உக்கிரமாக இருக்கிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் அளவு இயல்பைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, அதன் எதிர்வினையாக கோடைமழை வருவது இயல்பு. அந்த வகையில் கோடை மழை ஆங்காங்கே பெய்ய தொடங்கி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தான்இந்த கோடை மழை அவ்வப்போது பெய்து வருகிறது.

12வரை கோடை மழை
இந்நிலையில் ராஸ்பி அலைவு, வெப்பமண்டல காற்று குவிதல் மற்றும் காற்று சுழற்சி போன்ற காரணிகளால் நாளை தொடங்கும் இந்த கோடை மழை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்த தகவலின்படி, நாளை முதல் 5-ந்தேதி (சனிக்கிழமை) வரை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கனமழை
நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.இதேபோல் ஏப்ரல் 4 மற்றும் 5-ந்தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஞாயிறு அன்று புதிய சுழற்சி
டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் மழை குறித்து கூறும் போது, வருகிற ஏப்ரல் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாக உள்ளதாக கூறினார். இந்த புதிய காற்று சுழற்சி காரணமாக ஏப்ரல் 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.
வெப்பம்
கோடை மழை என்பது பொதுவாக மாலை அல்லது இரவில் பெய்யவே வாய்ப்பு உள்ளதால் பகலில் வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதாவது பகலில் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும் என்கிறார்கள். கோடை மழை பெய்தால் ஓரளவு இரவில் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து மக்கள்தப்பிக்க வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு மழை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.. சென்னையில் வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications