அடுத்த 4 நாள்.. 20 நிமிடத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிங்க.. வந்த திடீர் அறிவுறுத்தல்! என்னாச்சு
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் ஆரம்பிக்கும் முன்பே வெப்பம் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் அடுத்த 4 நாட்களுக்கு இயல்பைக் காட்டிலும் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், வெப்பத்தை எதிர்கொள்ள ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர் குடிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலத்தைச் சமாளிப்பது பெரிய போராட்டமாகவே மாறி வருகிறது. முன்பெல்லாம் ஏப்ரல், மே மாதம் தான் வெப்பம் உச்சம் தொடும். ஆனால், சில காலமாக மார்ச் முதலே வெப்பம் அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் வெப்பம்
அதிலும், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில் வெப்பம் அதிகரித்துவிட்டது. இப்போது மார்ச் மாதம் தொடங்கிய பிறகு, மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சம் தொடத் தொடங்கிவிட்டது. அதீத வெப்பம் காரணமாக நீரிழப்பு, ஹீட்ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். இதற்கிடையே வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க சில பொதுவான வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது..
சுகாதார துறை
இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்குத் தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிகளவில் நீர் குடிக்க வேண்டும். வெளியே செல்லும் போதும் உடன் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள். வானொலி, தொலைக்காட்சிகளில் வானிலை மையத்தின் எச்சரிக்கைகளைக் கேட்டு அதற்கேற்ப பயணங்களைத் திட்டமிடுங்கள்.
வீட்டில் இருக்கும் போதும் கூட காற்றோட்டம் அதிகம் உள்ள குளிர்ந்த பகுதிகளில் இருங்கள். வீட்டில் வெப்பம் அதிகரிக்காமல் இருக்கத் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.. அதேநேரம் வீட்டில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்யுங்கள். உடலைக் குளிர்விக்க ஃபேன் மற்றும் ஈரத்துணியைப் பயன்படுத்தலாம். வெப்பம் அதிகம் இருக்கும் போது சமைப்பதைத் தவிர்க்கவும். சமையல் அறையைக் கூட காற்றோட்டமாக வைத்திருக்கவும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை தண்ணீர்
நீங்கள் வெளியே வேலை செய்ய வேண்டி இருந்தாலும் முடிந்தவரை நேரடியாகச் சூரிய ஒளி படுவதைத் தவிருங்கள்.. வெயில் உச்சத்தில் இருக்கும் போது அதிக வேலைப்பளுவை உடலுக்குத் தரக்கூடாது. நிழலான பகுதிகளுக்கு அடிக்கடி சென்று ஓய்வெடுங்கள்.. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும், மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்கலாம். இந்த நேரங்களில் வெளிப்புற நடவடிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். வெளியே போகும் போது கண்டிப்பாகக் காலணியைப் பயன்படுத்துங்கள்.
கவனம் மக்களே
தளர்வான மற்றும் வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிந்து செல்லுங்கள். சூரிய ஒளியைத் தவிர்க்கக் குடை தொப்பி அணிந்து செல்லாம். மேலும், தலைச்சுற்றல், தலைவலி என எதாவது அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரியச் சிகிச்சை பெற வேண்டும்" என்றனர். வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சுகாதாரத் துறை அறிவுறுத்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications