நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட்
சென்னை: கோடையின் அதீத வெப்ப அலையிலிருந்து தமிழக மக்களுக்கு நிம்மதியளிக்கும் வகையில், இன்று இரவு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை தொடங்கி கடலூர், சேலம் என மாநிலம் முழுக்க 26 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு வெப்பம் படுத்தி எடுத்துவிட்டது என்றே சொல்லலாம். வழக்கமான கோடைக் காலத்தோடு எல் நினோவும் சேரவே இந்தாண்டு இந்தியா முழுக்க வெப்பம் அதிகமாகவே இருந்தது. அதிலும் சென்னை உட்பட கடலோர பகுதிகளில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால், ஜூன் மாதம் வந்தவுடனேயே வெப்பம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. படிப்படியாகப் பல இடங்களில் மழை ஆரம்பித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரம்
இதற்கிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 10 மணி வரை சென்னை, புதுச்சேரி, கடலூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட கடலோரப் பகுதிகளில் வான்வெளியில் மிக மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் காரணமாகப் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
26 மாவட்டங்களில் கொட்டும் மழை
இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஆங்காங்கே இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூரில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. திடீரென இடி, மின்னலுடன் பெய்யும் இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் தற்காலிகமாகத் தண்ணீர் தேங்க வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பெய்யும் இந்த மழையினால் சில முக்கிய பிரதான சாலைகளில் தற்காலிகப் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம்
முன்னதான வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த சென்னை மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு, இந்த திடீர் நள்ளிரவு மழை ஒரு நிம்மதியான குளுமையான இரவை தரப்போவது உறுதி!












Click it and Unblock the Notifications