ஊட்டியாக போகும் ‘இந்த’ மாவட்டங்கள்! சென்னையில் கொளுத்தி எடுக்கப் போகும் வெயில்..மெட் கொடுத்த அப்டேட்
சென்னை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மழை பெய்த நிலையில் டிசம்பர் ஜனவரியில் கடுமையான பனியின் தாக்கம் இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில் இரவு நேரத்தில் கடுமையான பனிப் பொழிவு காரணமாக மக்கள் கடும் அவதியை சந்தித்தனர்.

ஆனால் பிப்ரவரி மாதம் தொடங்கியதும் கோடை காலமே தொடங்கிவிட்டது போல வெயில் கொளுத்தி வருகிறது. கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் பிப்ரவரி மாதத்தில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூமத்திய ரேகை அருகில் வளிமண்டல சுழற்சி உருவானதால் கன்னியாகுமரி தென்காசி நெல்லை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. மிகப் பெரிய அளவில் மழையின் தாக்கம் இல்லை என்றாலும் லேசாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில் தமிழகத்தில் வெயில் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
20ம் தேதி வரை வறட்சியான வானிலை நிலவும் எனவும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இருபதாம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அதே நேரத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி உடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
குறிப்பாக 22ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று முதல் தமிழகத்தின் ஒரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் எனவும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications