வானிலை அறிக்கையை இனி கண்டுக்க வேண்டாம்.. மழை முடிவுக்கு வந்துடுச்சு! வெதர்மேன் அப்டேட்
சென்னை: டிட்வா புயல் கொண்டு வந்த மழை, சென்னை உட்பட வட மாவட்டங்களை புரட்டி எடுத்திருக்கிறது. இந்நிலையில் இந்த மழை முடிவுக்கு வருவதாகவும், கனமழைக்கான அச்சம் இருக்காது எனவே, இனி வானிலை அறிக்கையை கண்டுக்க வேண்டியதில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "இன்று இரவு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். இந்த மழை குறைந்த நேரமே நீடிக்கும். அதேபோல நாளையும் குறைந்த நேரம் மட்டுமே மழையை கொடுக்கும் மேகங்களின் தாக்கம் இருக்கும். அதற்கு பிறகு மழைக்கு குட்டி பிரேக் இருக்கும்.

தேனி, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர் என தமிழ்நாடு முழுவதும் மிதமான மழை பதிவாகியிருக்கிறது. இருப்பினும் எங்கும் கனமழை பதிவாகவில்லை. நாளையும் சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை இருக்கும். மற்றபடி பெரியதாக எதிர்பார்ப்பதற்கு ஏதும் இல்லை. எனவே நம்முடைய அன்றாட வேலைகளை நாம் தொடங்கலாம். அதேபோல பெரிய மழை ஏதும் இல்லை என்பதால் வானிலை அறிக்கையை கண்டுக்க தேவையில்லை.
டிச.9 மற்றும் 10ம் தேதி தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு இது மழையை கொடுக்குமா? அல்லது இத்துடன் இந்த மாவட்டங்களுக்கு மழை முடிவடைகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட்டை கொடுத்திருந்தது. அதன்படி, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், நீலகிரி, திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும்.












Click it and Unblock the Notifications