இப்ப ஆபிஸ்ல இருந்து அடிச்சி புடிச்சிட்டு வர தேவையில்லை! சென்னையில் இரவு போக போகத்தான் மழை! வெதர்மேன்
சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இரவு போக போக மேகக் கூட்டங்கள் உண்டாகி விட்டு விட்டு மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவு போக போக மேகக் கூட்டங்கள் உருவாகும். இதனால் விட்டுவிட்டு மழை பெய்யும்.

அதிகாலை முதல் அலுவலகம் செல்லும் நேரம் வரை 4 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். தற்போது கூட 5 முதல் 10 நிமிடங்கள் வரை சென்னையில் மழை பெய்தது. எனவே பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல வேண்டிய அளவுக்கு மழை இருக்காது. நின்று நிதானமாகவே கிளம்பலாம். இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடதமிழகம்- தெற்கு ஆந்திரா இடையே நிலவி வருகிறது. இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தம் வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, மதியம் 2.30 மணியளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் 14ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
15ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கன மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-26° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications