சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் பெங்கல் புயல்! நவ. 29, 30ல் வெளுக்கும் கனமழை! வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல் நவம்பர் 30ஆம் தேதி சென்னை - பரங்கிப்பேட்டை (கடலூர் மாவட்டம்) இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல் வரும் நவம்பர் 30ம் தேதி சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.

இதனால் சென்னையில் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையின் தெற்கு பகுதிக்கு அருகே புயல் கரையை கடப்பதால் கனமழை பெய்யும். சென்னைக்கு எந்த தேதிகளில் எந்த அளவுக்கு மழை பெய்யும் என்பதன் உத்தேச பட்டியலை பார்க்கலாம்.
புயலானது வடக்கு நோக்கி நகரும் நாளான இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். நாளை நவம்பர் 28ஆம் தேதியும் புயலானது வடக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னையில் மிதமான மழை பெய்யும்.
அது போல் 29ஆம் தேதி அன்று மேற்கு திசை நோக்கி புயல் நகர்ந்து வருவதால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்தநாள் 30-ஆம் தேதி அதாவது புயல் கரையை கடக்கும் நாளன்று சென்னையில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும்.
புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கம் காரணமாக சென்னையில் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் புயல் கரையை கடந்த பின்னர் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கொங்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதிபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்றுமுன் தின நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த நிலையில் இது நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்தது. இதனால் நேற்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா என வானிலை ஆய்வு மையத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று இரவு பெங்கல் புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தில் அதுவும் வடதமிழகத்தில்தான் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் இந்த புயலானது வடதமிழகத்தில் சென்னை- பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புயல் சின்னம் நாகப்பட்டினம் அருகே இருப்பதால் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் விவசாய நெற்பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. இந்த புயல் சின்னம் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதால் இலங்கையில் இருந்து தமிழக கடற்கரையை நெருங்கி வருகிறது. இந்த புயல் சின்னம் பயணிக்கும் பகுதிகளில் எல்லாம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications