அடுத்த 10 நாட்களுக்கு ஹாட் ஸ்பாட் இவைதான்! அடித்து ஆட போகும் மழை! வெதர்மேன் தகவல்! அப்போ சென்னை?
சென்னை: அடுத்த 10 நாட்களுக்கு உள் மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், டெல்டாவில் மழையானது அடித்து ஆட போவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: உள்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அது போல் தென் தமிழகத்தின் சில பகுதிகளும் இணையும். அதே வேளையில் சென்னையில் இரவு நேரங்களில் இருந்து அதிகாலை வரை மழையானது தொடரும்.

அக்டோபர் மாதத்தில் சென்னையில் 350 மி. மீ. மழையை தாண்டிவிட்டது. இது மிதமிஞ்சிய மழைதான். அதே வேளையில் தமிழகத்தில் இந்த மாதம் 150 மி.மீ மழை பெய்துள்ளது. இது 70 சதவீதம் அதிகம். அடுத்த 10 நாட்களில் உள்மாவட்டங்கள், கொங்கு, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
அது போல் பெங்களூரிலும் மழைக்கு பஞ்சமிருக்காது. இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை என்பதை பார்க்கலாம். அதாவது சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல், திருவண்ணாமலை, விருதுநகர், திண்டுக்கல், விழுப்புரம் , கடலூர் மற்றும் வேலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை பொருத்தமட்டில் பெரியதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் லேசான மழை பெய்யும். அக்டோபர் 24 - 25 ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் டானா புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இது ஒடிஸா கடலோரத்தை நோக்கி செல்கிறது. இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்க்குறிப்பில், "இன்றும், நாளையும் வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்." என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தம் காரணமாக திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் 20 ஆம் தேதி வரை தமிழகத்தில் இயல்பாக 95.1 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் நிகழாண்டில் 156.7 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 70 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications