புயலாக மாறும் ஆழ்ந்த காற்றழுத்தம்! சென்னைக்கு நாளை அதி கனமழை பெய்யும்- வெதர்மேன்
சென்னை: வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளது என்றும் இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் நிலவியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தீவிரமடைந்துள்ளது. இது மேலும் அதி தீவிரமடைய வாய்ப்புகள் உள்ளன.

புயலாக மாற வேண்டுமானால் காற்றின் வேகம் மணிக்கு 64.8 கி.மீ. வேகத்தில் அதாவது 35 knot வேகத்தில் வீச வேண்டும். (35 knot என்பதில் knot என்றால் வேகத்தின் அலகு ஆகும். அதாவது மணிக்கு ஒரு நாட்டில் மைல் என்பதாகும். தோராயமாக மணிக்கு 1.15 மைல்கள் ஆகும். கி.மீ.ரில் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாட் என்பது 1.8952 கி.மீ. ஆகும்) .
தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமானது 30 knotகளை நெருங்கியுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து 35 knotகளாக மாறும். மேலும் 40 முதல் 45 knot வேகத்தை, அதாவது மணிக்கு 83 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் புயலாக மாற வாய்ப்புள்ளது. தற்போது வரை இந்த சிஸ்டத்தில் காற்று என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை.
அடர்ந்த மேகக் கூட்டங்கள் உருவாகவுள்ளன. இன்று மாலை முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய கடற்கரையோரம் முதல் மரக்காணம் கடற்கரையோரம் வரை இன்றும் நாளையும் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்பதால் அன்றைய தினம் கண்காணிக்கப்பட வேண்டிய அவசியமாகும். எனினும் இந்த ஆழ்ந்த காற்றழுத்தம் தீவிரமடைந்தது குறித்து வானிலை மையம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவில் கூட 20 முதல் 40 மி.மீ. வரை 1 முதல் 2 மணி நேரத்தில் பெய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இன்னமும் புதுவைக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய கடற்கரைக்கும் வெகு தூரத்தில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: நவ.29-ம் தேதி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுவை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவ.30-ம் தேதி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
நவம்பர் 29 மாலை முதல் நவம்பர் 30-ம் தேதி மதியம் வரை, வட தமிழக கடலோர மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்றானது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், அவ்வப்போது 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் நவ.30-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications