திடீரென சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை.. என்ன காரணம்? எங்கெல்லாம் தொடரும்? வெதர்மேன் விளக்கம்
சென்னை: சென்னையில் அடுத்த இரண்டு அல்லது 3 நாட்களுக்கு இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தென்கிழக்கு பருவமழை மெதுவாக விலகிக் கொண்டிருக்கிறது. அடுத்தபடியாக வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் அந்த சீசன் வரும் அக்டோபர் 20க்கு மேல் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, மேற்கு திசை காற்று உள்ளிட்ட காரணங்களால் இந்த மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவிக்கிறது.
அந்த வகையில் சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடியவிடிய கனமழை நேற்று கொட்டித் தீர்த்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இரவில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினமும் பெய்தது.
சென்னையின் முகப்பேர், அண்ணாநகர், கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், பல்லாவரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மாங்காடு, பூந்தமல்லி, ஆவடி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று மாலை முதலே சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதையடுத்து இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இரவு முதல் அதிகாலை வரை நிறைய மேகக் கூட்டங்கள் கடல் பகுதிகளில் இருந்து நகர்ந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு இது போன்ற திடீர் மழை சென்னையில் தொடரும்.
உள் தமிழக மாவட்டங்களான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தெற்கு கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த சீசனில் கேரளாவுக்கு கனமழை பரவலாக பெய்தது. அக்டோபர் மாதம் பெய்த மழை கன்னியாகுமரி அணைகளின் நீர்மட்டம் உயர உதவியுள்ளது.
வைகை, பாபநாசம் உள்ளிட்ட அணைகளில் 50 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. தெற்கு தமிழகத்திற்கு அக்டோபர் மாதம் பெய்யும் மழை பயனை கொடுக்கும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தாலும் அந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பவில்லை. இது பற்றாக்குறையை போக்காது. தென் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக மழை எதிர்பார்க்கப்படும். இதன் மூலம் நீர் நிலைகளில் நீர் மட்டம் அதிகரிக்கும் என தெரிகிறது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications