"உருவாகுது சக்கரம்.." தமிழகத்தில் இந்த பகுதியில் கனமழை கன்பார்ம்.. வெதர்மேன் சொன்ன பரபர மேட்டர்
சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பருவமழை இந்தாண்டு போதியளவில் மழையைத் தராமல் ஏமாற்றிய போதிலும், வடகிழக்கு பருவமழை நல்ல மழையைக் கொடுத்து வருகிறது.

அதிலும் குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் கிட்டத்தட்ட தினசரி மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு வெதர்மேன்: இதற்கிடையே வரும் நாட்களில் ஏற்படப் போகும் வானிலை நிகழ்வுகள் குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சக்கரம் உருவாக இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். அதாவது முன்னதாக பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் டிசம்பர் முதல் வாரம் சக்கரம் உருவாகப் போகிறது என்று கூறியிருந்த நிலையில், அதைக் குறிப்பிடும் வகையிலேயே இதைப் பதிவிட்டுள்ளார்.
பசிபிக் ரிட்ஜ், இந்திய ரிட்ஜ் பகுதிகளில் காற்றின் வேகமாறுபாடு ஏற்படுகிறது. இது டிசம்பர் முதல் வாரம் சக்கரமாக உருவாகும் என்றும் இதன் மூலம் வடதமிழக பகுதிகளில் மழை கிடைக்கும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சக்கரம்: அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மற்றொரு ட்வீட்டில், "இந்த பருவமழை இதுவரை அற்புதமான ஒன்றாக இருந்து வருகிறது. தீவிரமான காற்றழுத்தங்களுடன் தினசரி மழை பெய்து வருகிறது. வரும் நவம்பர் 29ஆம் தொடங்கி டிசம்பர் முதல் வாரத்தில் மழை அதிகரிக்கும். இப்போது அனைவரது கவனமும் உருவாகும் சக்கரத்தின் மீது தான் இருக்கிறது. அந்த சக்கரத்தில் இன்னும் 6 நாட்களில் அதில் பல திருப்பங்கள் நடக்கக்கூடும். இருப்பினும் என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல 2 நாட்கள் தேவை" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "அது எங்கே கரையைக் கடந்தாலும் கூட ஒரு விஷயத்தைக் கண்டிப்பாகக் கூறலாம். அதாவது வடகிழக்கு பகுதிகளில் வரும் நாட்களில் நிச்சயம் நல்ல மழை பெய்யும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் நேற்று செய்திக்குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில் நேற்று (நவ.27) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும் எச்சரித்திருந்தது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் நவ. 27 முதல் நவ. 29 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications