திசை மாறும் கிழக்கு காற்று.. பனிமூட்டத்திற்கு நடுவே கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை சீசன் முடிந்துவிட்ட நிலையில், இன்று ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல நீலகிரியில் உறைபனி குறித்த எச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையுடன் பருவமழை முடிவுக்கு வந்தது. இதன் பின்னர் மாநிலம் முழுவதும் பரவலாக வறண்ட வானிலைதான் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் உறைபனி குளிர் நிலவி வருகிறது. இந்நிலையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாளை பொறுத்த அளவில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக பனிமூட்டம் இருந்தாலும் பகல் நேரங்களில் அதிக அளவு வெயில் பதிவாகி வருகிறது. இதனால் எதிர்வரும் ஏப்ரல், மே காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.
வட மாநிலங்களை பொறுத்த அளவில் இன்னும் பனி மூட்டம் குறையவில்லை. இதனால் விமானம் மற்றும் ரயில் சேவைகளில் கடும் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications