பேரழிவை சந்தித்த தூத்துக்குடி மாவட்டம்.. காயல்பட்டினத்தில் 93 செமீ.. தமிழக வரலாற்றில் அதி பயங்கரம்
தூத்துக்குடி: தென்மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருவதால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஓர் ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளிலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செமீ மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மழை அளவு வரலாற்றில் இது புதிய உச்சம் என்று அந்த மாவட்ட மக்கள் கூறியுள்ளனர்.
அதே போல திருச்செந்தூர் மாவட்டத்தில் 67 செமீ மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் 61 செமீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதி பயங்கர கனமழை பதிவாகியுள்ளது.
சாலைகள் எங்கும் ஆறுகளாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பேருந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற முத்துநகர் எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரம் ஸ்தம்பித்துள்ளது.
சராசரி மழை அளவை விட 100 சதவிகிதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. ஓராண்டு முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications