அடுத்த 2 மணி நேரம்.. திருவள்ளூர் டூ மதுரை வரை.. 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, சிவகங்கை, பெரம்பலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைப் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் பெய்யக்கூடிய அளவை விட 31 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று கணித்து இருந்தது. அதை மெய்ப்பிக்கும் வகையிலேயே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில், இன்று இரவு 7 மணி வரை பெரம்பலூர், கரூர், திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று காலை 08. 30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 10 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11 ஆம் தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழையும், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications