அடுத்த 2 மணி நேரம் விட்டு விளாசப் போகும் மழை.. இடி, மின்னலுடன் வெளுக்கும்! 14 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்று காலையில் இருந்து வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து எடுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்ததால், மக்கள் அவதியடைந்தனர். கடந்த 3 நாட்களாகவே வெயில் உக்கிரம் காட்டி வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், அதற்கு அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வெளுத்து எடுக்கும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது.

அதே போல மாலை நேரங்களில் திடீரென ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 7 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்கள் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, ஈரோடு, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் லேசான இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட ஒரு வாரத்திற்கான அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று சனிக்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை எங்கெல்லாம் மழைக்கு சான்ஸ்
நாளை ஞாயிற்றுக் கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் திங்கட்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 10 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 11 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
13 ஆம் தேதி வரை
12 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்) பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications