இனி பேரிடரை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கலாம்.. அதிநவீன டாப்ளர் ரேடார்கள்.. தமிழக அரசின் அதிரடி!
சென்னை: வானிலையை துல்லியமாக கணிக்க ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டாப்ளர் ரேடார்களை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்துவதற்காக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை 2 ரேடார்களை வாங்குகிறது. ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய இடங்களில் ரேடார்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அப்போது, வானிலை முன்னெச்சரிக்காக நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

விரைவான வானிலை முன்னறிவிப்புகளை பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண்காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
மேலும், வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநாதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், வானிலையை துல்லியமாக கணிக்க ரூ.50 கோடி மதிப்பீட்டில் 2 சி-பேண்ட் டோப்ளர் ரேடார் வாங்க தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை டெண்டர் கோரியுள்ளது. புதிதாக வாங்கப்படும் இந்த சி-பேண்ட் டோப்ளர் ரேடார்களை ராமநாதபுரம் மற்றும் ஏற்காட்டில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பதில் இந்த ரேடார்கள் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கத் தவறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இந்த ரேடார்கள், பேரிடர் காலங்களில் பெரிய அளவில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications