கரூர் கூட்டநெரிசல்: விஜய் அரசு பணி வழங்கியதை எதிர்த்து வழக்கு.. உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு
சென்னை: கரூர் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்ட நிலையில், வரும் 24 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக அரசு அரசு பணி வழங்கியது. மொத்தம் 31 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்ட நிலையில், பணி நியமனம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

தமிழக அரசுக்கு உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு வேலை வழங்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. எனினும், தற்காலிக பணியாகவே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, முதல்வரும் தவெக தலைவருமான விஜய், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 29 பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என்று கூறப்பட்டது. மேலும் இத வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. அப்போது, வரும் 24 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டது
இதையடுத்து மனு மீதான விசாரணையை வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் அனைத்து பணி நியமனமும் நீதிமன்ற இறுதி முடிவுக்கு உட்பட்டதுதான் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி விஜய் கரூர்க்கு பிரசாரம் சென்றார். அப்போது விஜய்யை பார்க்க வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். 41 பேர் நெரிசலில் சிக்கிய பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தவெக சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.
அரசு பணிக்கான ஆணை
அதுபோக மாதம் தோறும் ரூ.5 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்து இருந்தார். சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், கடந்த 10 ஆம் தேதி கரூர் சென்ற விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை வழங்கினார்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தது.
டிஎன்பிஎஸ்சிக்கும் உத்தரவு
முன்னதாக அன்றைய தினம் பிறப்பித்த உத்தரவில் பணி நியமனம் என்பது அரசின் ஆய்வுக்கு உட்பட்டது. பணி நியமன ஆணைகளை பெறும் நபர்கள் முதல் மாத சம்பளத்தை பெறுவதற்கு முன்பாகவே வழக்குகளை விசாரிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று கூறியிருந்தது. மேலும் இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சியையும் எதிர்தரப்பினராக சேர்த்து உத்தரவிட்ட நீதிமன்றம், கருணை அடிப்படையில் பணி நியமன வழங்குவதற்கான உத்தரவு இந்த விவகாரத்தில் பொருந்துமா? என்று பதிலளிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட்டு இருந்தனர்.


Click it and Unblock the Notifications
