வந்துட்டாருய்யா வருண பகவன்! ’இந்த’ மாவட்டங்கள் தான் இன்று டார்கெட்! குடை இல்லாமல் வெளியே போகாதீங்க
சென்னை: தமிழகத்தில் கடந்த மூன்று தினங்களாகவே நல்ல மழை பெய்து வரும் நிலையில், இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகை பகுதிகளில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை கடுமையான வெயில் கொளுத்தி எடுத்தது. குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
மதுரை, ஈரோடு, சென்னை ஆகிய பகுதிகளை வெப்பம் 100 டிகிரிக்கு மேல் கடந்ததால் மக்கள் அசௌகரியமாக உணர்ந்தனர். வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மழை பெய்தது. நேர்மாறாக ஜூன் மாதத்தில் மே மாதத்தை விட வெயில் அதிகமாக இருந்தது.'

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் காரணமாக ஆகஸ்ட் தொடக்கத்திலேயே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மட்டுமல்லாது ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். குறிப்பாக இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications