Vellore: வேலூர் வெயிலுக்கு குட்டி பிரேக்! வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை அலர்ட்
வேலூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழையின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது பருவமழை வட மாவட்டங்களை பதம் பார்த்து வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை வேலூர் உட்பட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி ஆகிய 17 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை சுமார் 151.7 மில்லி மீட்டர் அளவுக்கு சராசரியாக மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட 13% குறைவாகும். வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை 199.5 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 25% அதிகமாக இருந்தாலும், விழுப்புரத்தில் 42%, திருவாரூரில் 58%, தூத்துக்குடியில் 55%, திருப்பத்தூரில் 47%, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54%, கன்னியாகுமரியில் 45%, தர்மபுரியில் 53% என மழை இயல்பை விட குறைவாக பதிவாகி இருக்கிறது.
முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்திலிருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆக.11 முதல் 14 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (08-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டித்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (09-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications