சென்னை மக்களே ரெயின் கோட், குடையை மறக்காதீங்க! இன்னைக்கு சம்பவம் இருக்கு.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது விடுபட்ட மாவட்டங்களில், தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை உட்பட வங்கக்கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். எனவே வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் சென்னை மக்கள் குடை, ரெயின் கோட்டை மறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு பொதுவாக இரண்டு பருவங்கள் மழைப்பொழிவை கொண்டு வரும். ஒன்று தென்மேற்கு, மற்றொன்று வடகிழக்கு. தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூலையில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டும் ஜூலை தொடங்கி செப்டம்பர் இறுதிவரை இழுத்து, இழுத்து பெய்தது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியது. ஆனால், சென்னை தொடங்கி வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அவ்வளவாக இல்லை. அவ்வளவு ஏன், தென்மாவட்டமான தூத்துக்குடி கூட போதிய அளவுக்கு மழையை பெறவில்லை.

ஒட்டுமொத்த சராசரியில் மழை கூடுதலாக பெய்திருந்தாலும், மாவட்ட வாரியாக பார்த்தால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டங்களில் மழையே பெய்யவில்லை. இப்படி இருக்கையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இது தொடங்கிய மாத்திரத்திலேயே வட மாவட்டங்களில் கொட்டி தீர்த்துவிட்டது. அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கி நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் இயல்பை விட 17% கூடுதலாக மழை பெய்திருக்கிறது. இந்த நாட்களில் இயல்பாக 210.4 மி.மீ அளவுக்குதான் மழை பெய்யும். ஆனால், 247.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
இந்நிலையில் இன்று முதல் வட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கப்போகிறது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இன்று காலை சென்னை தொடங்கி டெல்டா வரையிலான கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதுவே வெள்ளிக்கிழமை முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் சென்னை, திருவள்ளூர், புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை என ராமேஸ்வரம் வரை வட மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். அதன் பின்னர் இந்த லிஸ்ட்டில் தென் மாவட்டங்களும் இணையும். மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யும். எனவே, சென்னை மக்கள் ரெயின் கோட், குடையை மறந்துவிடாதீர்கள்" என எச்சரித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், காலை 10 மணிவரை திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
அதேபோல நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10ம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications