பிச்சு உதறப்போகும் கனமழை.. ஆஃப்-தி சீசனுக்கு ரெடியா மக்களே! வெதர்மேன் கொடுத்த வார்னிங்
சென்னை: பருவமழையெல்லாம் ஜனவரி பாதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இருப்பினும் இந்தியப் பெருங்கடலில் நடக்கும் முக்கிய மாற்றம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, "வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படாமல் இருந்த மாடன்-ஜூலியன் அலைவு (MJO), தற்போது வலுவான தீவிரத்துடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது. 'கிங் மேக்கர்' என வர்ணிக்கப்படும் இந்த MJO இந்தியப் பெருங்கடலுக்கு வரும்போது, அது வானிலை போக்கையே முழுமையாக மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது.

இதன் தாக்கத்தால், பிப்ரவரி கடைசி வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் மழை எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் பொதுவாக வறண்ட வானிலையைக் கொண்டிருக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் பரவலான இடியுடன் கூடிய மழை அல்லது பிற மழைப்பொழிவு ஒரு அரிதான நிகழ்வாகும். ஆனால், வலுவான MJO நிகழ்வுகள் எதிர்பாராத வெப்பச்சலனங்களைத் தூண்டக்கூடும்.
இருப்பினும், இது பருவத்தையொட்டி பெய்யும் மழை அல்ல என்பதால், இந்த கணிப்பை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த நிகழ்வு பிப்ரவரி 18 அல்லது 19 ஆம் தேதி வாக்கில் உறுதிப்படுத்தப்படும். 'MJO வந்தால் எதையாவது கொடுக்காமல் போகாது' என்பது வானிலை வட்டாரங்களில் நிலவும் ஒரு பொதுவான கருத்தாக உள்ளது" என தெரிவித்திருக்கிறார்.
MJO என்றால் என்ன?
MJO என்றால் மாயாவி போன்றதாகும். இது பூமியின் நிலநடுக்கோட்டை சுற்றி வலம் வரும் மிகப்பெரிய மேகக்கூட்டமாகும். உலகம் சுற்றும் வாலிபன் என்று இதை சொல்லலாம். ஓரிடத்தில் நிலையாக இருக்காது. இது மேற்கு திசையிலிருந்து, கிழக்கு நோக்கி அதாவது ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வழியாக பசிபிக் பெருங்கடல் நோக்கி நகரும். உலகை இது சுற்றி வர 30-60 நாட்கள் வரை ஆகும்.
இந்த மேக கூட்டம் கடற்கரையை நோக்கி நகரும் போதும் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவை கொடுக்கும். ஆனால், இது நகர்ந்து போன பின்னர் வறண்ட வானிலை நிலவும். இது பருவமழை காலத்தில் இந்திய நிலப்பரப்புக்கு வரும்போது, பருவமழையை அதிகரித்து புயலை உருவாக்கும். எனவேதான் இதனை வானிலை ஆய்வாளர்கள் கிங் மேக்கர் என்று அழைக்கின்றனர்.
சிக்கல் என்னவெனில், கடந்த நவம்பர்-டிசம்பர் மாதம் இது வராமல், வறண்ட காலமான பிப்ரவரியில் வந்திருக்கிறது. எனவே, இது பிப்ரவரி இறுதி தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை மழையை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications